Saturday 4th of May 2024 08:43:04 AM GMT

LANGUAGE - TAMIL
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை ஏற்கமுடியாது!

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை ஏற்கமுடியாது!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிகழ்த்திய கொள்கை விளக்க உரையை இலங்கைத் தமிழரசுக் கட்சி அடியோடு நிராகரித்துள்ளது. அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா முல்லைத்தீவில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இந்த நாட்டில் எழுபது ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை மாற்றியமைத்து, நாட்டில் ஒரு இனப் பிரச்சினை இல்லை என்கின்றார் கோட்டாபய. அதிகாரங்களைப் பகிரத் தேவையில்லை என்கின்றார்.

சர்வதேச ரீதியாக இந்தியாவுடன் செய்யப்பட்ட உடன்படிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எல்லாவற்றையும் அவர் நிராகரிக்கின்றார்.

ஜனாதிபதி தனது கொள்கை அறிக்கையில் ஒரு புதிய வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். பௌத்த - சிங்கள நாடு என்பது மாத்திரமல்ல, பௌத்த சிங்கள பெரும்பான்மைத்துவ ஆதிக்கத்தை கடைப்பிடிப்பேன், நிலைநாட்டுவேன் என்று சொல்லியிருக்கின்றார்.

இந்த நாட்டில் வேறு இன மக்கள் இருக்கின்றார்கள் என்றோ, அவர்களும் சம உரிமைகள் உடையவர்கள் என்றோ, அந்த மக்கள் சமமாக நடத்தப்படவேண்டுமென்றோ ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை. பெரும்பான்மைத்துவ ஆட்சி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமொரு பெரும் நெருக்கடியை எமக்குத் தந்திருக்கின்றது.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக்கூடாது என்பதற்காக நாம் சண்டையிடவில்லை. அப்படி தேசிய கீதம் இசைத்தால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்று நாம் நினைக்கவில்லை. அதுவல்ல பிரச்சினை, மொழி ஒரு அடையாளம், தமிழுக்கு சம தகுதி இல்லை என்பது தமிழர்களுக்கு சம அந்தஸ்து மறுக்கப்படுவதாகும்.

இந்த ஆட்சியால் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்கள், ஜனநாயகத்துக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்கள் நிறையவே இருக்கின்றன.

எமது இனத்தை அழிக்கின்ற, நிலங்களை ஆக்கிரமிக்கின்ற, எமது மொழி உரிமைகளை முடக்குகின்ற செயற்பாடுகள் தற்போது அதிகம் முனைப்புப் பெற்று வருகின்றன. நாம் எமது இனமும், நிலமும் விடுதலை பெறும்வரையில் ஜனநாயக ரீதியாக தொடர்ந்தும் போராடுவோம்" - என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE